ஜாதக கட்டம் அல்லது ராசி கட்டம் எனப்படும் 12 வீடுகளுக்கான பலன்கள் | 12 Houses in Astrology in Tamil
ஜோதிடத்தின் மிக அடிப்படையாக பார்க்கப்படுவது 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆகும்.
பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஒரு நபரின் பிறந்த நேரத்தையும் பிறந்த ஊரையும் வைத்துக்கொண்டு எளிதாக அவர் எந்த ராசியில் பிறந்துள்ளார் மற்றும் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் என்பதனையும் அவர் பிறக்கும் போது எந்த நவகிரகத்தின் தசா இருப்பில் பிறந்துள்ளார் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
- பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து ராசி கட்டம் மற்றும் நவாம்சம் கட்டத்தை ஜோதிடர்கள் குறிப்பு எழுதி ஜாதகமாக கொடுப்பார்கள்.
நண்பர்களே, நீங்கள் உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கட்டங்கள் இருக்கும். அதில் ஒரு கட்டம் ராசி கட்டம் எனவும் மற்றொரு கட்டம் நவாம்சம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நாம் இந்த பதிவில் ராசி கட்டம் என அழைக்கப்படும் ஜாதக கட்டம் பற்றியும் அந்த ஜாதக கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்டத்திற்கான (பாவகம்) காரகத்துவத்தை பற்றியும் பார்ப்போம் வாருங்கள்…
ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவகம் எனப்படும். இந்த ஒவ்வொரு பாவகமும் பல காரகத்துவத்தை பெற்றுள்ளது. இந்த ஒவ்வொரு பாவகத்திலும் கிரகங்கள் அமரும்போது அதற்கான காரகத்துவ பலன்களை செய்யும்.
ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் ஜாதகத்தில் உள்ள ராசி கட்டம் எனப்படும் ஜாதக கட்டம் அதாவது 12 கட்டங்கள் அல்லது வீடுகளில் உள்ள கிரகங்களின் அமைப்பும் அது அமர்ந்துள்ள நட்சத்திர பாதச்சாரமும் மாறுபடும். இதை மையமாக வைத்துதான் ஜோதிடர்கள் உங்களது ஜாதகத்தை கணிப்பார்கள்.
அப்படி உங்கள் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்கள் அல்லது வீடுகளுக்கான அடிப்படை பலன்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்…
முதல் பாவகம் அல்லது முதல் வீடு
ஜாதகத்தில் உள்ள முதல் கட்டத்தை லக்கின பாவகம் எனக் கூறுவர்.
- இது ஜாதகரின் உடல்வாகு, நிறம், தோற்றம், அழகு, ரத்தத்தின் தன்மை, தலை அமைப்பு, ஆயுள் பலம், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவைகளை குறிக்கும்.
ஜாதக கட்டத்தில் உள்ள இந்த முதல் வீடானது பலமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு வாழ்க்கையில் குறையாத யோகமும், நீண்ட ஆயுளும் உடைய வாழ்க்கை அமையப்பெறும்.
- ஒரு நபர் வாழ்க்கையில் அனைத்து சுகங்களும் மற்றும் நன்மைகளும் கிடைக்கப்பெற இந்த லக்ன பாவகமும், லக்னாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.
இரண்டாம் பாவகம் அல்லது இரண்டாம் வீடு
இந்த பாவகம் ஜாதகரின் வீடு மற்றும் வாக்கு ஸ்தானத்தை குறிக்கிறது.
- இந்த பாவகம் ஆனது ஜாதகரின் குடும்பம், கல்வி, தனம், வாக்கு, பேச்சுத் திறன், அவரின் ஆர்வம், கலைத்திறன், நடை உடை பாவனை, நவரத்தினங்கள், உணவு, முகம், நாக்கு, நிலையான கொள்கை ஆகியவற்றை குறிப்பதாகும்.
இந்த பாவகத்தை வைத்து ஜாதகரின் உண்மைத் தன்மை, பொய் பேசுதல், கோபம் கொள்ளுதல், வலது கண், வஞ்சக நெஞ்சம் கொண்டவரா, பெருந்தன்மை குணம் உடையவரா போன்றவைகளை அறிந்து கொள்ளலாம்.
- வீடு, மனை வாங்கக்கூடிய தன ஸ்தானம் ஆகவும் இந்த இரண்டாம் பாவகம் குறிப்பிடப்படுகிறது.
இந்த பாவகத்தை வாக்கு ஸ்தானம் என்பதால், சுவை அறிந்து உணவு உண்பதையும் மற்றும் பேச்சின் உண்மை தன்மையையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
மூன்றாம் பாவகம் அல்லது மூன்றாம் வீடு
ஜாதகர் எதிரியை எதிர்கொள்ளும் திறன், வெற்றி பெறும் திறமை, தொழில் அமையக்கூடிய நிலை, இசையில் ஆர்வம் மற்றும் இசையை ரசித்தல், வீரியம், தைரியம், துணிவு, பயமின்றி செயலாற்றும் மனப்பாங்கு, ஆண்மைத் திறன் போன்றவை இந்த மூன்றாம் பாவகத்தில் அடங்கும்.
- மூன்றாம் பாவகம் சகோதர ஸ்தானம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஜாதகரின் காதுச் சார்ந்த நோய், காது கேளாத தன்மை, ஆடை, ஆபரணம் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வைரம் சேரும் யோகம் போன்றவைகளையும் இந்த மூன்றாம் பாவகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- ஜாதகர் மற்றவரிடம் சென்று பணியாற்றும் நிலை ஏற்படுதல் மற்றும் அதனால் பெரும் நன்மைகள் போன்றவைகளை பற்றியும் இந்த மூன்றாம் பாவகம் குறிப்பிடும்.
நான்காம் பாவகம் அல்லது நான்காம் வீடு
இந்த பாவகம் மாதுர் ஸ்தானம் (தாய்) எனவும் குறிப்பிடப்படுகின்றது.
- இந்த நான்காம் பாவகம் ஆனது தாயாரின் உடல்நலம், உறவுகளின் நிலை, உயர் கல்வி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்தல், வாகனம் வாங்குதல், வசிக்கும் வீடு, தொழில், ஜாதகர் பெரும் புகழ் நிலை, புதையல் யோகம், பால், பால் பொருட்கள், சிறு தூர வெளிநாட்டு பயணம், ஆன்மீகப் பயணம் போன்றவைகளை பற்றி இந்த பாவகம் குறிப்பிடுகிறது.
நான்காம் பாவகத்தில் கிரகங்களின் வலிமை
- புதன் பலமாக இருந்தால் ஜாதகரின் கல்வி சிறப்பாக இருக்கும்.
- சந்திரன் பலமாக இருந்தால் தாயின் பாசம் மற்றும் ஆயுள் நிலை நன்றாக இருக்கும்.
- குரு பலமாக இருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகள், சுக போகங்கள், புகழ் பெறும் நிலைகள் நன்றாக இருக்கும்.
- செவ்வாய் பலமாக இருந்தால் அசையாத சொத்துக்களின் தன்மை, வீடு, நிலம், பண்ணை வீடுகள், தோட்டம் நன்றாக இருக்கும்.
- சுக்கிரன் பலமாக இருந்தால் கார், இரு சக்கர வாகனம், ஆபரணம் வாங்கும் நிலை போன்றவை நன்றாக இருக்கும்.
ஐந்தாம் பாவகம் அல்லது ஐந்தாம் வீடு
ஐந்தாம் பாவகம் ஆனது புத்திர ஸ்தானம் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் பற்றிய பாவகமாகும்.
- இது தாய் வழி உறவு, செல்வம், பூர்வ புண்ணியங்கள், மாமன்மார்களின் உறவு, மொழியில் தேர்ச்சி பெறுதல், உயர்கல்வி பெறுதல், மந்திரங்கள், அனுபவ அறிவு, அறிவுத்திறன், சென்ற பிறவியில் செய்த நன்மை தீமைகள் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பலன்கள், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, சொற்பொழிவு செய்தல், பேச்சாற்றல், வேதங்கள் கற்கும் திறன் போன்றவைகளைப் பற்றி ஐந்தாம் பாவகம் குறிப்பிடுகிறது.
ஆறாம் பாவகம் அல்லது ஆறாம் வீடு
ஆறாம் பாவகம் ஆனது நோய் அல்லது ரோக ஸ்தானம் பற்றிய பாவகமாகும்.
- இந்த பாவகம் ஆனது ஜாதகர் எந்த நோயினால் பாதிக்கப்படுவார் என்பதைப் பற்றியும், அவருக்கு பகைவரால் ஏற்படக்கூடிய துன்பம் பற்றியும், ஆயுதங்களால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றியும், வலி, காயம், சண்டை, யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல் போன்றவைகளைப் பற்றியும் குறிப்பிடும்.
நெருப்பால் ஆபத்து, பொருட்கள் திருடு போகுதல், விலங்குகளால் ஆபத்து உண்டாகுதல், தண்ணீர், நெருப்பால் ஆபத்து, சிறைப்படுதல், சிறைச்சாலை செல்லுதல், உயர் பதவியை அடைதல், சோம்பேறித்தனம், கால்நடைகள் பற்றிய அறிவு ஏற்படுதல் போன்ற காரகத்துவத்தை பற்றியும் இந்த ஆறாம் பாவகம் ஆனது குறிப்பிடுகிறது.
ஏழாம் பாவகம் அல்லது ஏழாம் வீடு
ஏழாம் பாவகம் ஆனது களத்திர ஸ்தானம் மற்றும் மாரக ஸ்தானம் பற்றிய பாவகமாகும்.
- இந்த ஏழாம் பாவகம் ஆனது ஆண்களுக்கு அமையும் மனைவியை பற்றியும், பெண்களுக்கு அமையும் கணவரைப் பற்றியும் குறிப்பிடும் பாவகம் ஆகும்.
இந்த பாவகத்தின் மூலம் ஒருவருக்கு திருமணம் நடக்கும் காலம் மற்றும் கணவன் மனைவியின் ஆயுள், திருமண பந்தத்தின் சுகம், சிற்றின்பம் போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
- இந்த ஏழாம் பாவகம் ஆனது தொழில் மற்றும் தொழிலில் கூட்டாளிகளின் பங்கு மற்றும் அவர்களின் நட்புறவுகள், வியாபாரம், கௌரவம், பட்டம் பெறுதல், பதவி பெறுதல் போன்றவைகளைப் பற்றியும் குறிப்பிடும்.
எட்டாம் பாவகம் அல்லது எட்டாம் வீடு
எட்டாம் பாவகம் ஆனது துஸ்தானம் என குறிப்பிடப்படுகிறது.
- இந்த எட்டாம் பாவகமானது ஜாதகரின் ஆயுள் பலத்தை குறிக்கும் பாவகம் ஆகும். மரணத்தை அறிவிக்கும் பாவகம் ஆகும்.
யுத்தம் செய்தல், உயர்வான இடத்தில் இருந்து கீழே விழுதல், சண்டையில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், விபத்து, மலையில் இருந்து கீழே விழுதல், தீராத வியாதியால் பாதிக்கப்படுதல், வீண் அலைச்சல் ஏற்படுதல், இடையூறு ஏற்படுதல், மன சஞ்சலம், நீங்காத பகை உண்டாகுதல், தகாத காரியங்களை செய்தல், கருத்து மோதல்களுக்கு உள்ளாகுதல், அதிகப்படியான வீண் செலவுகள் செய்தல் போன்ற காரகத்துவத்தை பற்றியும் இந்த எட்டாம் பாவகம் குறிப்பிடும்.
ஒன்பதாம் பாவகம் அல்லது ஒன்பதாம் வீடு
ஒன்பதாம் பாவகம் ஆனது பாக்கியஸ்தானம் மற்றும் பிதுர் ஸ்தானம் (தந்தை) பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
- ஜாதகர் முன்பிறவியில் செய்த பாவம் மற்றும் தர்மம் செய்தல், நன்கொடை கொடுத்தல், கோயிலை புதுப்பித்தல், கும்பாபிஷேகம் செய்தல், ஆன்மீக உணர்வு ஏற்படுதல் போன்ற காரகத்துவத்தை பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
தானம் மற்றும் தர்மம் பற்றி பேசும் ஒன்பதாம் பாவகம்
தர்மம் என்பது கேட்டுக் கொடுப்பது.
தானம் என்பது கேட்காமல் கொடுப்பது.
தானத்தில் மிகச்சிறந்த தானம் அன்ன தானம் மற்றும் கல்வி தானம் மற்றும் பசித்தோருக்கு உணவு கொடுத்தல். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுதல், மனித நேயம் மற்றும் ஜீவகாருண்யம் போன்ற நற்செயல்களை ஜாதகர் செய்பவரா அல்லது செய்ய மாட்டாரா என்பதனை தெரிவிக்கும் பாவகமாகும்.
பத்தாம் பாவகம் அல்லது பத்தாம் வீடு
பத்தாம் பாவகம் ஆனது உத்தியோக ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
- தொழில் செய்தல், தொழிலில் வெற்றி பெறுதல், வேலைக்கு செல்லுதல், அரசுப்பணி, அரசியல்வாதி, கர்ம வினைகளை செய்து முடித்தல், லாபம் பெறுதல், உயர் பதவி பெறுதல், அரசின் மூலம் கௌரவம் பெறுதல், பட்டம் மற்றும் பதவி பெறுதல், வரலாற்றில் இடம்பெறுதல், இறவா புகழ் பெறும் தகுதியை அடைதல் போன்ற காரகத்துவத்தை பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
பதினோராம் பாவகம் அல்லது பதினோராம் வீடு
பதினோராம் பாவகம் ஆனது லாப ஸ்தானம் பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
- பதினோராம் பாவகம் ஆனது மூத்த உடன் பிறப்புகளையும், சேவை செய்யும் மனப்பாங்கு, இரண்டாம் திருமணம் செய்தல் (இளைய மனைவி) போன்றவைகளையும் குறிக்கும்.
நண்பர்கள் அமைதல், நண்பர்களால் நற்பண்பை பெறுதல், கால்நடை பராமரித்தல், செய்யும் தொழிலில் லாபம், குதிரை மற்றும் யானை வளர்த்தல், மாப்பிள்ளை, மருமகள் அமையும் யோகம், அறிவுத்திறனை குறிப்பிடுதல், மன நிம்மதியை பற்றி குறிப்பிடுதல், துன்பங்கள் தீர்க்கக் கூடிய நிலையைப் பற்றி குறிப்பிடுதல் போன்ற காரகத்துவத்தை பற்றி இந்த பதினோராம் பாவகம் குறிப்பிடும்.
பன்னிரண்டாம் பாவகம் அல்லது பன்னிரண்டாம் வீடு
பன்னிரண்டாம் பாவகம் ஆனது மோட்ச மற்றும் விரைய ஸ்தானம் பற்றி குறிப்பிடும் பாவகமாகும்.
- இது ஜாதகரின் தொழில் அல்லது வியாபாரம் அதனால் ஏற்படும் செலவுகள், சுகம், தூக்கம், தியாக மனப்பான்மை,யாகம் செய்தல், மறுபிறவி, தேவையற்ற செலவுகளில் சிக்குதல், யோகம், முக்தி அடைவது போன்ற காரகத்துவத்தை பற்றி குறிப்பிடும்.
நண்பர்களே, இந்தப் பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். நன்றி
TAMIL JATHAGAM |
Fine sir / Madam இந்த 12 கட்டடங்களில் 1ல்இருந்து 12 வரை. முதல் கட்டமாக இருப்பது தனுசு ராசிஆ அல்லது மேஷ ராசிஆ .
உங்கள் ஜாதகத்தில் “ல” என்று எழுதப்பட்டிருக்கும் அந்த கட்டமே லக்கினம் என்று அழைக்கப்படும். லக்கினத்தை முதல் கட்டமாக வைத்து அதிலிருந்து பன்னிரண்டு கட்டத்தை என்ன வேண்டும்.